மட்டக்கள்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில் பற்று, மற்றும் போரைதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனினால் இன்று (29) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் கே. திருவருளின் ஏற்பாட்டில் மண்டூர், நவகிரி நகர் மற்றும் ஆரையம்பதி பிரதேச பிரிவுகளுக்கான பிறப்பு, இறப்பு பதிவாளர்கள் மூவருக்கான நியமனக் கடிதங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் அன்மைக் காலமாக நிலவிய 25 பதிவாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட நேர்முத் தேர்வின் அடிப்படையில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 பதிவாளர் நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் இன்றைய தினம் மூவர் பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் தம்பிராசா தயாபரன் மண்டூர் பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு பதிவாளராகவும், மண்முனை தெற்கு மற்றும் எருவில் போரைதீவுப்பற்று பிரிவின் விவாகப்பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி. கோகிலாதேவி சுதாகரன் நவகிரி நகருக்கான பிறப்பு இறப்பு பதிவாளராகவும், மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரிவிற்கான விவாகப் பதிவாளராகவும், திருமதி. கலைச் செல்வி புவிதர்சன் ஆரையம்பதி பிரிவின் பிறப்பு இறப்பு பதிவாளராகவும், மண்முனைப்பற்று பிரிவின் விவாகப் பதிவாளராகவும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நியமனக் கடிதங்களைக் கையளிக்கும் நிகழ்வில் வெளிக்களப்பிரிவிற்கான பதவிநிலை உதவியாளர் எம். றிழா, பதிவாளர் நாயக திணைக்களத்தின் கிழக்கு வலயஅலுவலகத்தின் உத்தியோகத்தர்களான ஏ.எம்.ரீ. சுபராஜ், வை. சதுசியா உற்பட பதிவாளர்களின் உறவினர்களும் பிரசன்னமாயிருந்தனர்.