மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில், ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லைக் கற்கள் இடுவதற்காக நேற்று (12) தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் விஜயம் செய்திருந்தனர். இதனை அறிந்த மக்கள், அந்தந்த இடங்களில் ஒன்று கூடிநின்றனர். அத்தோடு, வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்தில் மாபெரும் சிரமதானப் பணியையும் அன்னதான நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
தமது நடவடிக்கைகளுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அறிந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குள் சென்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இதையறிந்த மக்கள் பிரதிநிதிகளாகிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்
பா. அரியநேத்திரன் உள்ளிட்ட பலர் பிரதேச செயலகத்துக்குச் சென்று பிரதேச
செயலாளருடனும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடமும் கலந்துரையாடினர்.
இவ்விடயம் தொடர்பில், கிராமமட்ட அமைப்புகளுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும்
தைப் பொங்கல் தினத்துக்குப் பின்னர் ஒரு நாளில் கலந்துரையாடுவது எனத்
தீர்மானிக்கப்பட்டது.