உள்ளுராட்சிமன்றங்களின் செயற்பாடுகளை கிராம மட்ட மக்களும் அறிந்து அதன் சேவைகளைப்பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தினை அகம் மனிதாபிமான வள நிலையம் முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சிமன்ற
உறுப்பினர்கள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்களை
ஒன்றிணைக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.
குறிப்பாக
பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் அதிகமாக வாழும் உள்ளுராட்சிமன்றங்களை
இனங்கண்டு அவற்றில் இந்த செயற்றிட்டத்தினை அகம் மனிதாபிமான வள நிலையம்
முன்னெடுத்துவருகின்றது.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதேசசபை உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான அறிவுறுத்தல் செயலமர்வு செங்கலடி பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றது.
அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் லவகுசராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசசபையின் பிரதி தவிசாளர் இராமச்சந்திரன்,பிரதேசசபையின் செயலாளர் பற்குணன், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் மதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிராம மட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து
பிரதேசசபையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படாத நிலையும் பிரதேசசபையினால்
முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கிராம மட்ட மக்களும் அறியாத நிலைமையே
காணப்படுகின்றது.
இவ்வாறானவற்றை பிரதேச மட்ட பிரதேசசபை
உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்களை
ஒருங்கிணைப்பதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்
என்ற காரணத்தினால் இவ்வாறான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக அகம்
மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் மதன் தெரிவித்தார்.