மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பிரிவில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளித்தெழு பெண்கள் அமைப்பின் ஊடாக அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன.
பாடசாலை அதிபர் என். கதிர்காமத்தம்பி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விளித்தெழு பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் சசிகலா நரேந்திரா விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களை வழங்கினார்.
அத்துடன் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் விசேட தேவையுடைய மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை அவதானித்து, அவற்றை மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில் தாம் உதவி செய்யவிருப்பதாக இந்நிகழ்வில் பணிப்பாளர் தெரிவித்தார்.
விசேட தேவையுடைய மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளித்து, கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குக் காணப்படும் போக்குவரத்துச் சிக்கல்கள் தொடர்பாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
விசேட தேவையுடைய மாணவர்களது பெற்றோர்களின் வேண்டுகோளிற்கு இணங்க பாடசாலை அதிபரினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.