மரண தண்டனை கைதி ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் சுமார் 11 ஆண்டுகளின் கைது செய்யப்பட்டுள்ளார்

 


மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் சுமார் 11 ஆண்டுகளின் பின் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் 2000 ஆம் ஆண்டு ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதன்போது, ​​சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்ட பின்னர் அவர் வழக்குக்கு ஆஜராகவில்லை. இதன்படி, அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத நிலையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, அதன் பிரகாரம் 08 மே 2012 அன்று உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து திறந்த பிடியாணை பிறப்பித்தது.

இதேவேளை, சந்தேகநபர் நேற்று (23) அத்தனகல்ல கஹடோவிட்ட பகுதியில் பதுங்கியிருந்த போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நாளை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.