புதிதாக பிறந்துள்ள 2023ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் வசித்து வரும் 19 ஆயிரம் அகதிகளுக்கு தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் நிரந்தர விசாக்களை விரைவில் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த 19 ஆயிரம் அகதிகள் ‘Legacy Caseload’ எனக் கூறப்படும் 31 ஆயிரம் அகதிகளுக்குள் ஒரு பகுதியினர். இந்த அகதிகளில் பெரும்பாலானோர் கடந்த ஆகஸ்ட் 2012 முதல் ஜனவரி 2014 வரை அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்கள். பல ஆண்டுகளாக முழுமையான தீர்வின்றி கடத்தப்பட்டு வரும் இந்த அகதிகளின் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாத சிக்கலையே Legacy Caseload என விவரிக்கப்படுகிறது.
தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் (temporary protection visas) அல்லது பாதுகாப்பான புகலிட விசாக்களில் (safe haven enterprise visas) உள்ள 19 ஆயிரம் பேருக்கு மட்டும் நிரந்தர விசாக்கள் வழங்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், அகதிகள் நல செயல்பாட்டாளர்கள்/வழக்கறிஞர்கள் மற்றொரு கேள்வியினை எழுப்புகின்றனர். அதாவது, அவுஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்பின்றி வசிக்கும் மீதமுள்ள 12 ஆயிரம் அகதிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் என்ன பதில் சொல்லும் என்பதே அக்கேள்வி. அவர்களது தஞ்சக்கோரிக்கை எப்பொழுது ஏற்கப்படும் என்கின்றனர் அகதிகள் நல வழக்கறிஞர்கள்.
ஒரு நாட்டுக்குள் எப்படி நுழைந்தவராக இருந்தாலும் அகதிகளுக்கு தஞ்சம் வழங்க வேண்டும் எனக் கூறும் 1951 அகதிகள் சாசனத்தில் அவுஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ள போதிலும் ஆஸ்திரேலியா படகு வழியாக வந்த அகதிகளை பாரபட்சத்துடன் அணுகுகிறது.
இந்த சூழலில், அகதிகளுக்கு நிரந்தர விசா தொடர்பாக எப்போது தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என்ற கேள்வியை முன்வைக்கிறார் அகதிகள் நல செயல்பாட்டாளரான ஐன் ரிண்டோல்.
கடந்த ஆண்டு மே மாதம் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் ‘இதோ அகதிகளுக்கு நிரந்தர விசா’ வழங்குவது தொடர்பாக முடிவெடுப்பதாக சொல்கின்றனர். ஆனால் இதுவரை எடுக்கப்படவில்லை. 2023ம் ஆண்டில் எடுப்போம் என்கிறார்கள்.
2023ம் ஆண்டு என்றால் எப்போது? ஜனவரி மாதமா? பிப்ரவரியா? மார்ச் மாதமா? 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டியவர்கள் இந்த அகதிகள். அப்படியான அந்த அகதிகளுக்கு நிரந்தர விசா ஒவ்வொரு நாளும் தாமதப்படுத்தப்படுவது அவர்களின் வாழ்க்கையில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது எனக் கூறுகிறார் ஐன் ரிண்டோல்.
அது மட்டுமின்றி இந்த அரசாங்கம் 19 ஆயிரம் அகதிகள் குறித்து மட்டுமே பேசுகிறது. ஆனால் நாங்கள் ஒட்டுமொத்தமாக உள்ள 31 ஆயிரம் தொடர்பாக பேசுகிறோம் என்கிறார் ஐன் ரிண்டோல்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் 19 ஆயிரம் அகதிகளுக்கும் எவ்வாறு நிரந்தர விசாக்களை வழங்கும் என தெளிப்படுத்தவில்லை என்கிறார் Grandmothers for Refugees எனும் அமைப்பின் இணைத்தலைவரான ஜீன் கெர் வால்ஷ்.
“இந்த மக்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா?” என்ற கேள்வியை முன்வைக்கும் கெர் வால்ஷ், நிரந்தரமாக வசிப்பதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க மேலும் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்புகிறார்.
அண்மையில் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது போல் சாதாரண துறை ரீதியான முடிவாக அனைவருக்கும் நிரந்தர விசாக்கள் வழங்க வேண்டும் என்பது Grandmothers for Refugees அமைப்பின் இணைத்தலைவரான ஜீன் கெர் வால்ஷ் பார்வையாக உள்ளது.
“நிரந்தர விசாக்களின்றி, வருமானமின்றி, வேலைச் செய்வதற்கான உரிமையின்றி கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக நரகத்தில் இருக்கும் அகதிகளை மீண்டும் விசா விண்ணப்ப பரிசீலனை என ஏன் மற்றொரு செயல்முறைக்குள் தள்ள வேண்டும்,” எனக் கூறுகிறார் கெர் வால்ஷ்.
“இதில் ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். அவர்களை ஒருபோதும் திருப்பி அனுப்பக்கூடாது. அந்த 31 ஆயிரம் அகதிகளுக்கும் நிரந்தர விசாக்களை வழங்குவது மிகவும் எளிதான துறை ரீதியான முடிவாக இருக்கும்,” என அவர் கூறியிருக்கிறார்.
இதுமட்டுமின்றி, அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு செயல்படும் பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் இன்னும் 180 முதல் 190 அகதிகள் உள்ளனர். அவர்களை ஆஸ்திரேலிய அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியை அகதிகள் நல செயல்பாட்டாளரான ஐன் ரிண்டோல் எழுப்பியிருக்கிறார்.