6,000க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


கடந்த மூன்று வருடங்களில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  உட்பட 6,000க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஊழியர்களின் சம்பளத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஏறக்குறைய 8 இலட்சம் பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும், சுமார் 6 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்த அவர் 2021 ஆம் ஆண்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளி நாட்டிற்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 136 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த வருடம் 300,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு கல்வி கற்கச் சென்றுள்ளதாகவும், இதனால் நாட்டுக்கு பாரிய தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு தொழில் வல்லுநர்கள் வெளியேறுவது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாகவும், இதனை தடுக்க அரசு அவசர வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.