அமெரிக்காவின் வேர்ஜினியாவில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் 6 வயது மாணவர் ஒருவர், ஆசிரியை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அந்த சிறுவன் தற்போது காவல்துறையின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதுடைய ஆசிரியை ஒருவரே வகுப்பறைக்குள் வைத்து துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
எனினும் இது தற்செயலான துப்பாக்கிச் சூடு அல்ல என்று அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கி தொடர்பில் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதாகவும், இந்த நேரத்தில் ஒருமுறை துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக குறித்த ஆசிரியர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்பட்டபோதும், தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் குறித்த துப்பாக்கி எங்கிருந்து எடுத்து வரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.