க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் ,இரவு 7.00 மணிக்கு பின்னரும் மின் வெட்டு அமுல் படுத்தப்படும் என்ற அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை

 


க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி இரவு 7.00 மணிக்கு பின்னர் மின் வெட்டை அமுல்ப்படுத்த வேண்டாமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்த போதிலும், இன்றும் வழமை போன்று பகல் வேளையில் 1 மணித்தியாலமும், இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின் உற்பத்தி தொடர்பில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இந்த மின்வெட்டு காலத்தை தொடர வேண்டியுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு அதிகளவு நிதி தேவைப்படுவதாகவும், தற்போதைய சூழலில் மின்சார சபையிடம் அந்தளவு நிதி இல்லை எனவும், அவசியமான நிதி வழங்கப்பட்டால், மின்வெட்டை அமுல்ப்படுத்துவதை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும், ஜனாதிபதி அடங்கலான அமைச்சர் மற்றும் இதர மின்சார சபை அதிகாரிகளுக்கிடையே மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் முரண்பாடு எழுந்துள்ளமை, இந்த தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும், இதனால் தமது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கியமான பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு இந்த மின்வெட்டு அமுலப்படுத்தப்படுவதானது பரீட்சைக் காலத்தில் மன அழுத்தத்தை தோற்றுவித்துள்ளதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.