இலங்கைத் திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சிறப்பு நிகழ்வுகளை நடாத்த மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்கான முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
ஆங்கிலேயரின் காலனித்துவத்திலிருந்து இலங்கைத் திருநாடு சுதந்திரம் பெற்று இவ்வாண்டுடன் 75வருடங்கள் நிறைவு பெறுகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 75வது சுதந்திர தின ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 இலட்சம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் கடந்த ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்றன.
இதனடிப்படையில் இச்சுதந்திர தின நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக சிறப்பாக நடாத்துவதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையடல் அரச நிர்வாகம், பொலிஸ், பாதுகாப்பு, கல்வி உட்பட்ட சம்மந்தப்பட்ட பிரிவுகளின் பிரதானிகளுடன் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரன், இராணுவ த்தின் 38வது பிரிவிற்கான கட்டளைத் தளபதி லெப்டினன் கேணல் நிலந்த, கெப்டன் எம். ஜெகதரன், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ. உவைஸ் உட்பட 231 வது படைப்பிரிவு, மற்றும் வான்படை உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபை, வலயக் கல்வி அலுவலகம், உள்ளிட்ட பல அரச திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமயிருந்தனர்.