புலம்பெயர் தமிழர்களின் விடாமுயற்சியால், ஐனவரி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என இங்கிலாந்து நகரசபையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், தமிழ் மொழியின் பெருமையயும் தமிழர்களின் கலை கலாசார பண்பாடுகளையும் எடுத்துக்காட்டும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள் விழா இங்கிலாந்தில் சனிக்கிழமை (28 ஜனவரி 2023) நடைபெற்றது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) ஆகியன இணைந்து கிங்ஸ்டனின் நியூமோல்டனில் உள்ள Jubilee Square எனும் இடத்தில் மேற்படி தமிழ் மரபுத் திங்கள் விழா வெகுசிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.
தமிழர் கலை கலாசார பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக்கொணரும் இக் கொண்டாட்டத்தில் தமிழரின் வீர இசையான பறை இசை முழங்க, கூடவே நாதஸ்வர-தவில் இசையுடன் புலியாட்டம், காவடி ஆட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம் உட்பட்ட மேலும் பல கண்கவர் தமிழர் கலைகள், தமிழர் பாரம்பரிய உடைகள், திருமண பெண்அலங்காரம் மற்றும் பண்டைய இசை வாத்தியங்கள் என்பவற்றை காட்சிப்படுத்தியபடி இலண்டன் நியூமோல்டன் வீதிவழியாக பவனி வந்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களும் பெரும் திரளான மக்களும் கடும் குளிரிலும் ஒன்றுகூடியிருந்த திறந்த வெளி அரங்கிற்கு வந்துசேர்ந்தனர்.
மேற்குறித்த திறந்த வெளி அரங்கில் தைப்பொங்கல் காட்சிப்படுத்தல் இடம்பெற்றதுடன், அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன. இன்னிய வாத்திய கச்சேரி, தமிழ்தாய் வாழ்த்து நடனம், கோலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், தமிழர் வர்மக்கலை மற்றும் கும்மி நடனம் என தமிழ் திங்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டதுடன் ஒன்றுதிரண்டிருந்த பெருந்திரளான மக்களிற்கு பொங்கலும் வழங்கி மகிழப்பட்டது.