தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். விவசாயத்துடன் தொடர்புடைய தைப்பொங்கல் பண்டிகையின் போது, அதிக விளைச்சலைப் பெறுவதற்கு ஆசிர்வாதம் வேண்டி சூரிய பகவானுக்கு வழிபாடு செய்கின்றோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பொங்கல் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
கிழக்கின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிசெய்து தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக இவ்வருட தைப்பொங்கல் பண்டிகையை நாம் கருதுவோம்.
விவசாயத்தை நவீனமயப்படுத்துவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ள
அதேவேளை சர்வதேச சந்தையின் போட்டித் தன்மைக்கேற்ப தொழில்நுட்பத்தை
அடிப்படையாகக் கொண்ட வினைத்திறனுடனான இலாபகரமான விவசாயத்தை உருவாக்கவும்
எதிர்பார்த்துள்ளது.
அரசாங்கத்தின் இப்புதிய பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்புத்
திட்டத்திற்கு பங்களிப்பதன் மூலம் பொருளாதாரச் செழிப்புடைய நாட்டைக்
கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் இந்த தைப்பொங்கல் தினத்தில் ஒன்றிணைய
வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
சூரிய பகவானை வணங்கி, உலக மக்களுக்கு உணவளித்து உயிர்க்காக்கும்
உழவர்களைப் போற்றுவதுடன் விவசாயம் செழிப்படைந்து, வறுமை நீங்கி, செழிப்பான
நாட்டை உருவாக்கும் பயணத்திற்கு இத்தைப்பொங்கல் பண்டிகை ஆசிர்வாதமாக அமைய
வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும்
அனைத்து தமிழர்களும் இத்தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட
வாழ்த்துகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.