இந்து கோவில் மீது தாக்குதல்.

 


ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது நேற்று தாக்குதல் நடத்திய நபர்கள், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி உள்ளதாக ஆஸ்திரேலிய இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

தமிழர்களால் மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தபோது, கோவில் மீது தாக்குதல் நடத்தியிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக உஷா செந்தில்நாதன் என்ற பக்தர் கூறுகையில், 'நாங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சிறுபான்மையினர்.

 இது எனது வழிபாட்டுத் தலம். காலிஸ்தான் ஆதரவாளர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தங்கள் வெறுப்புச் செய்திகளால் கோவிலை நாசப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விக்டோரியாவில் உள்ள இந்து சமூகத்தினரை அச்சுறுத்த நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி விக்டோரியா மாநில முதல்வர் மற்றும் காவல்துறைக்கு வலியுறுத்தி உள்ளேன் என்றார். 

 இதேபோல், மெல்போர்ன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் மீது கடந்த 12ம்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியது குறிப்பிடத்தக்கது.