ஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன் இந்த அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்டுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கூடுதல் அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முதற்கட்டமாக ஆறு ஆளுநர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய ,மேல் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர்களை பெயரிட ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தெற்கு, சப்ரகமுவ வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுநர்
நியமிக்கும் பொறுப்பு பொதுஜன பெரமுனவுக்கு வழங்கவும் பொதுஜன பெரமுன மற்றும்
ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசியல்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விளையாட்டு, நெடுஞ்சாலைகள்,போக்குவரத்து, வனஜீவராசிகள் , சுகாதாரம்,
துறைமுகம், கைத்தொழில், மின்சாரம் மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுகள்
மாற்றப்பட இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.