தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான தமிழ் தேசிய கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும், எதிர்காலத்தில் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்திக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.
கடந்த காலத்தில் பலர் விட்ட தவறுக்கு நேர்ந்தவற்றை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணத்தில், எதிரிக்கு சாதகமாக பிளவினை ஏற்படுத்துவது மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியினையும் கொடுத்துள்ளது.
கூட்டமைப்பு என்பது ஆயிரக்கணக்கான மாவீரர்களின் உயிர்த் தியாகத்தாலும் தன்னிகர் அற்ற தலைவனின் வழிகாட்டலினாலும் உருவாக்கப்பட்டது. இத்தகைய தியாகத்தை பயன்படுத்தி பதவிகளை பெற்ற சிலர் சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற ஒற்றுமையை சீர்குலைப்பதை தமிழ் மக்கள் இனியும் அனுமதிக்க மாட்டார்கள்.
சிங்கள ஆட்சியாளர்கள் ‘ஒற்றுமையாக வாருங்கள்’ என தமிழர் தரப்பை பார்த்து, கேலி செய்யும்போது தொடர்ந்து தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் வகையில் தமிழர் தரப்பே செயற்படுவது மிக வேதனையாக உள்ளது. இதற்கான பதிலடி எதிர்காலத்தில் கிடைக்கும் என்றார்.