ஓசானம் நிலையத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் நடமாடும் பற்சிகிச்சை கூடத்தின் முதலாவது சேவை ஆரம்பம்!!

 








மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள ஓசானம் நிலையத்தில் நடமாடும் பற்சிகிச்சை கூடம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் இன்று (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஓசானம் நிலையத்தில் உள்ள விசேட தேவையுடைய சிறார்களின் பற்களையும் வாய்ச்சுகாதாரத்தையும் பரிசோதனை செய்து தேவையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை அதிகாரிகளினால் வழங்கப்பட்டது.
இந் நடமாடும் பற்சிகிச்சைக்கூட சேவை செயற்திட்டத்தின் ஊடாக ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு சேவை வழங்குவதுடன் பின்தங்கிய பிரதேசத்தில் பற்சிகிச்சை பெறமுடியாதுள்ள மக்களின் வாய்ச்சுகாதாரத்தை பரிசோதனை செய்து துரிதமாகாக சிகிச்சை வழங்குவதற்கு நவீன வசதிகளுடனான நடமாடும் பற்சிகிச்சை கூடம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என இதன் போது வைத்திய கலாநிதி கு.சுகுணன் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன், பிராந்திய பல் சத்திர சிகிச்சை நிபுணர் கே.முரளிதரன், சிரேஷ்ட பல் சத்திர சிகிச்சை நிபுணர் s.கேதீசன், நடமாடும் பல் சிகிச்சை கூடத்திற்குப் பொறுப்பான பல் சத்திர சிகிச்சை நிபுணர் கிஷாந்த், ஓசானம் நிலையத்தின் பொறுப்பதிகாரி யு.வத்சலா மற்றும் சுகாதார பிரிவின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.