வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அழுத்தம் இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் .

 
 

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நன்றாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் 2023 பெப்ரவரி 01ஆம் திகதியளவில் மேற்கு - வடமேற்குத் திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
அதன் தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் ஜனவரி 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதி மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டில் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மேலும் மட்டக்களப்பில் இன்று (31) காலை 8.30 மணிவரையான காலம் வரை 7.3மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது.
அத்துடன் தென்கிழக்கு திசையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக மழை யுடன் கூடிய காலநிலையை அவதானிக்கலாம் என மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி ரமேஷ் தெரிவித்தார்
இன்று (31) முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை அழுத்தம் காணப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.