தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்கி கொடுப்பது ஜனாதிபதியின் பொறுப்பாகும்- பெபரல் அமைப்பு

 


 உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சிக்கப்பட்டு வருவதாக பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்தின் சில தரப்புக்கள் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான முயற்சிகளை இன்னும் கைவிட்டதாக தென்படவில்லை என பெபரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

சில தரப்புக்கள் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சித்தாலும் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்த தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்தும் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடாத்தப்படும் என்ற நம்பிக்கையில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டாலும், அது உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அமைப்பின் 33(ஏ) சரத்தின் பிரகாரம் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்கி கொடுப்பது ஜனாதிபதியின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பணமில்லை அல்லது வேறும் காரணிகளைக் கூறி தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிக்க முடியாது என ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.