இவர் 1984 ஆம் ஆண்டு வானிலை அவதானிப்பாளராக வளி மண்டல திணைக்களத்தில் அரச கடமைக்கு சேர்ந்த பின்னர் ஆறு வருடங்கள் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராக
கடமையாற்றி வந்த நிலையில், 1991 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் திறந்த போட்டி பரீட்சை மூலம் தெரிவானார்.
அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் பிரதேச செயலாளராகவும், மாவட்ட செயலகத்தில் புணர்வாழ்வு இணைப்பாளராகவும் பணிபுரிந்த இவர் இலங்கை அரசின் புலமை பரிசு பெற்று லண்டன் சென்று, சர்வதேச பொதுமுகாமைத்துவத்தில் முதுமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 2009 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளராக பதவியேற்றார்.
அதன் பின்னர் கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராகவும், சுகாதார அமைச்சின் செயலாளராகவும் ,வீதி அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் செயலாளராகவும் பல்வேறு பதவிகளை வகித்த பின்னர் 2020 செப்டம்பர் மாதம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையினை பொறுப்பேற்றார்.
இவர் அரசாங்க அதிபராக கடமை வகித்த காலப்பகுதியில் நாடு எதிர் நோக்கிய கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்
மாவட்ட நிர்வாகத்தை திறம்பட மேற்கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் மூலம் தம்மால் முடியுமான உச்ச அளவிலான நிவாரணத்தை பெற்றுக் கொடுத்ததுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பல் வகையான உபகரணங்கள் கிடைப்பதற்கு பல தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில் மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த
விவசாயிகளின் நலனிலும் அதிக அக்கறையுடன் செயல்பட்டதுடன் அவர்களுக்கான எரிபொருள், உரம் மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கு தம்மால் முடியுமான உரிய தீர்வை சம்பந்தப்பட்ட அமைச்சிகளினூடாக பெற்றுக் கொடுத்திருத்தார்.
அது மாத்திரம்மின்றி இவரது காலத்தில் பலதரப்பட்ட இனங்களுக்கு மத்தியில் பல்வேறு வேலை திட்டம் மற்றும் நிகழ்வுகளினூடாக இன நல்லுறவை கட்டி யொழுப்புவதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டதுடன் இவர் அரசாங்க அதிபராக கடமை வகிந்த காலப் பகுதியில் மாவட்டத்தில் எவ்வித இன முரண்பாடுகளும் ஏற்படாத வகையில் தமது பணியினைத் தொடர்ந்து வந்தார்.
மேலும் இளைஞர்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்கும் அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் போதைப் பொருள் பாவனையற்ற மாவட்டமாக மாற்றி அமைப்பதற்கான பல்வேறு வேலை திட்டங்களை உச்ச அளவில் பொலீசார் மற்றும் இராணுவத்தினர்,சுகாதாரத் துறையினர், மற்றும் பிரதேச செயலாளர்கள் , ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் இணைந்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வந்தார்.
இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த சர்வதேச, தேசிய, மாகாண மட்டத்தில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் , கல்வியில் சிறந்த அடைவுமட்டத்தை பெற்ற மாணவர்களை பாராட்டி "வர்ண விருது " நிகழ்வை சிறப்பாக நடாத்தியதுடன் அவர்களை கௌரவித்தது "வெற்றி" எனும் சிறப்பு மலரையும் வெளியிட்டிருந்தது மட்டக்களப்பு மாவட்ட செயலகம்.
இவ்வாறான நிலையில் தமது பணியினை நேர காலம் பாராது மிகச் சிறப்பாக மேற்கொண்டு வந்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது சேவையினை மாவட்டத்தின் அனைத்து இன மக்களும் உயர்வாக மதித்து பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.