க.பொ.த உயர்தரப் பரீட்சை காலங்களிலும் மின்வெட்டு தொடரும்-

 


இலங்கை மின்சார சபை மின்வெட்டை இடைறுத்துவதற்கு இணங்கவில்லை என்றும் மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன், வியாழக்கிழமை (26) தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நாளாந்த மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை மாணவர்களின் மனித உரிமைகளை மீறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

பெப்ரவரி 17ஆம் திகதிவரை பரீட்சைகள் இடம்பெற இருப்பதால் அந்தக் காலப்பகுதி வரை மின்வெட்டை அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு ஆணைக்குழு கடந்த திங்கட்கிழமை (23) மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவித்தது.

அந்த அறிவித்தல் பொருட்படுத்தப்படாமையை அடுத்து, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர், அமைச்சின் உறுப்பினர்கள், மின்சார சபையின் அதிகாரிகள் ஆணைக்குழுவுக்கு புதன்கிழமை (25) அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர், பெப்ரவரி 17 வரை மின்வெட்டை இடைநிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மின்சார சபை அதிகாரிகளும் கலந்து கொண்டதாக தெரிவித்த இலங்கை மின்சார சபையின் தலைவர், மின்வெட்டு அமுல்படுத்தபடாது என்பதை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.

உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை இடைநிறுத்துவதற்காக எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் மின்வெட்டு இடைநிறுத்தப்படுவதாக தாம் அறிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

பரீட்சை நடைபெறும் பிற்பகல் வேளையில் மின்வெட்டு அமுலாகாது என்றும் அந்த நேரத்தில் எங்காவது மின் துண்டிக்கப்பட்டால் வேறு தவறாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், இரவு நேரங்களில் மின்வெட்டு அமுலாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை வழங்க சம்மதித்திருந்தால் அந்த எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பில் மின்சார சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், எரிபொருளின்றி மின்சாரம் வழங்க முடியாது என்றார்.