வடக்கு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றினால் குறுகிய காலத்திற்குள் நாடு பிளவுபடும்.

 


அரசாங்கம் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றினால் குறுகிய காலத்திற்குள் நாடு பிளவுபடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் அதிபர் தேர்தலை இலக்கு வைத்து வடக்கு மக்களை ஏமாற்றுவதற்காகவே அதிபர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அதிபருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது வடக்கில் உள்ள பிரிவினைவாத அரசியல்வாதிகளின் நோக்கத்திற்கு மட்டுமே உதவும் எனவும், ஆனால் வடக்கு மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 13ஏ சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கை இணைத்து கூட்டாட்சி முறைமையை வழங்க அதிபர் விக்ரமசிங்க கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் முயற்சித்ததாக வீரவன்ச கூறினார்.

சர்வகட்சி மாநாட்டின் ஊடாக கடந்த காலத்தில் அடையத் தவறிய உடன்படிக்கைகளை தற்போது நடைமுறைப்படுத்த அதிபர் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.