மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடைய, குழுவொன்றை
களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் கைது செய்து, களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில்,
சந்தேக நபர்களை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் மட்டக்களப்பு களுதாவளை பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து 54 பவுண் தங்க நகைகளும்,
10 இலட்சம் ரூபாய் பணமும் திருடப்பட்டிருந்தது.
சம்பவம்
தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார், கடந்த 16ம்
திகதி அதிகாலை, ஒந்தாட்சிமடம் பகுதியில் வைத்து, திருட்டுச் சம்பவத்தோடு
தொடர்புடைய பிரதான சந்தேக நபரைக் கைது செய்தனர்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது,
அவர்களிடமிருந்து அமெரிக்கத் தயாரிப்பிலான என்.61171 ரக
கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும், எவ்.ஆர்.ஏ.ஜி.எஸ்.எவ்-87 ரக கைக்குண்டு
ஒன்று, 120 கிராம் உருக்கப்பட்ட தங்க கட்டிகள் மற்றும் தங்கமாலை
தொலைபேசிகள் உட்பட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட
சந்தேக நபர்கள் கடந்த 16ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது,
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரண்டு நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்றைய தினம் மீண்டும் சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர்களை எதிர்வரும் 31ம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிழக்கு
மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜெயலத் அவர்களின்
ஆலோசனையின் பெயரில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
சுகதபாலவின் ஆலோசனையின் கீழ், களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ்
அத்தியட்சகர் ஜெனக்க ஜெயரெத்னவின் வழிகாட்டுதலில், களுவாஞ்சிகுடி பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரி தலைiமையிலான பொலிஸ் குழுவே திருட்டுக் கும்பலை
மடக்கிப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.