பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவானின் மூடிய அறையில் புதன்கிழமை (04) இரகசியமாக இடம்பெற்றது.
திறந்த நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மரணமடைந்தவரின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, தனது உத்தியோகபூர்வ அறையில் நீதவான் விசாரணை இடம்பெறும் என்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய அறிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக தினேஷ் ஷாப்டரின் மனைவி, நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த டிரிஸ் பெரேரா மற்றும் பொரளை மயானத்தில் பணியாற்றும் இருவர் நீதிமன்றத்துக்கு சமுகமளித்ததிருந்ததுடன், எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு நீதவான் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த டிசெம்பர் 15ஆம் திகதியன்று, கைகள் மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில் பொரளை பொது மயானத்தில் தமது காருக்குள் இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட தினேஷ் ஷாப்டர், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றிரவு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து 140 பேரிடம் வாக்குமூலம் பதிவு
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,
விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.