தப்பிச் செல்ல முயற்சித்தபோது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தேக நபர் .

 


காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) காவலில் இருந்த நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (VTA) உதவி முகாமையாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து 15 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் மேலதிக விசாரணை வேளையில், மருதானையில், வைத்து அவர் தப்பிச் செல்ல முயற்சித்தபோது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.