கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்சார வெட்டு அமுல்படுத்தப்படக் கூடாது.

 


கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு, தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குவது தொடர்பில் இன்று (16) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில்,  பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்சார வெட்டு அமுல்படுத்தப்படக் கூடாது என்று பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் மற்றும் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குமாறு பரீட்சை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரும் பொறியியலாளருமான ரொஹான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று (16) நடைபெறும் விசேட கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இந்த விடயம் குறித்து இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையையும் பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.