"பல்சமயங்களாக ஒன்றிணைந்து
உழவர்களுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்சமய ஐக்கிய பொங்கல் விழா புதுமுகத்துவாரம் காயத்திரி பீட வளாகத்தின் இன்று (16) திகதி வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை ஏ.யேசுதாசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கே.ஜெகதாஸ் அடிகளார், உப தலைவர் மொகமட் சாஜஹான் மௌலவி, பிள்ளையாரடி ஆஞ்சநேயர் அலய பிரதம குரு ஜெகதீஸ்வரக் குருக்கள், அமெரிக்கன் சிலோன் மிசன் குரு முதல்வர் அருட்பணி எம்.லூக்கேயன், ஜெயந்திபுரம் மத்தியஸ்தானத்தின் விகாராதிபதி கட்டஹிரகம தம்மஸ்ரீ,
காயத்திரி பீடத்தின் பிரதம குரு சிவஸ்ரீ.பீ.கிறிஸ்ணமூர்த்தி குருக்கள்
மற்றும் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் சமாதான செயற்திட்ட இணைப்பாளர் இக்னேசியஸ் கிறிஸ்டி, பல்சமய ஒன்றியத்தின் நிருவாக குழு உறுப்பினர்கள், பிரதேச பல்சமய குழுக்களின் உறுப்பினர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
பொங்கல் நிகழ்வின் தலைவர் த.குணரெட்ணத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற ஐக்கிய பொங்கல் விழா நிகழ்வில் பல்சமய தலைவர்களாக ஒருங்கிணைந்து பொங்கல் பானைக்கு அரிசி போட்டு, பொங்கல் பொங்கியதுடன், காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகள் அறநெறிப்பாடசாலையின் மாணவர்களினால் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், பொங்கலின் சிறப்பினை வெளிப்படுத்தும் கலாசார நிகழ்வுகள் மற்றும் அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்று, நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.