கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் களுவாஞ்சிக்குடியில் உள்ள இராசமாணிக்கம் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தின் போது, அரசாங்கத்துடனான தேசிய இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழரசுக்கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள கட்சிகளையும் உள்ளீர்த்து தேர்தலுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அது குறித்து விரிவாக மத்திய குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பத்தாம் திகதி முதல் அரசாங்கத்துடன் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைதொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன்போது முன்வைக்கப்பட வேண்டிய விடயங்கள் உள்ளிட்ட இதர விடயங்கள் தொடர்பில் குறித்த கூட்டத்தின் போது ஆழமான கவனம் செலுத்தப்படவுள்ளது.
அதேநேரம், கட்சியின் மாநாட்டுக்கான திகதியிடப்படுவதும், பின்னர் பிற்போடப்படுவதுமான நிலைமைகள் தொடர்ச்சியாக நீடிக்கின்ற நிலையில் அதுபற்றியும் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படுமென அறியமுடிகின்றது.