மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பிற்கான களப் பரிசோதனை விஜயம்.










மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே தினத்தில் நான்கு டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் மாதவனின் மேற்பார்வையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரமேஷ் குமார் தலைமையிலான குழுவினர், டெங்கு ஒழிப்புக் களப் பரிசோதனைக்கான விஜயமொன்றை நேற்று (19) திகதி மட்டக்களப்பில் மேற்கொண்டனர்.
இக்கள விஜயம் மட்டக்களப்பு, நொச்சிமுனை கருமாரி அம்மன் கோயில் வீதி மற்றும் சுவாமி விபுலாநந்தா இடைநடனக் கல்லூரியின் பின் வீதி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது.
கல்லடி தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை வளாகத்தின் பின்பகுதியில் உள்ள வெற்றுக்காணி, அப்பகுதியில் டெங்கு பெருக்கத்திற்கு ஏதுவாகக் காணப்பட்ட அரச, தனியார் வெற்றுக் காணிகள் மற்றும் வடிகாண்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன், வீடுகளில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.
அத்துடன் அப்பகுதிக் குடியிருப்பாளர்களுக்கு நுளம்புப் பெருக்கத்திலிருந்தும் நோய்களில் இருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்காக சுற்றுச் சூழலில் சுத்தம் பேணுதல் பற்றிய அறிவூட்டல் மற்றும் வழிகாட்டல்கள் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டன.
இவ்விஜயத்தில், இப்பகுதிக்குப் பொறுப்பான நாவற்குடா பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தம்பியையா பகீரதன் உட்பட சிரேஷ்ட மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதார அதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுகாதார, வைத்திய துறை சார்ந்த ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.