இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும் அவரை நீக்குவதற்காக குற்றப்பத்திரிகையும் தயாரிக்கப்பட்டு அதற்கு ஆளும் கட்சியின் அனைத்து எம்.பிக்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்ததும் ஒழுங்குமுறைகளுக்கு அமைய அவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், தம்னை கொமர்ஷல் வங்கியின் தலைவராக நியமிக்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜனக ரத்நாயக்க கோரியிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவருக்கு எதிரான முந்தைய குற்றச்சாட்டுகள் காரணமாக மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்ட அவருடைய பெயருக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க மத்திய வங்கி மறுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2012 ஆம் ஆண்டு ஜனக, அரசாங்கத்தில் எந்த பதவியையும் வகிக்கக்கூடாது என்று பாராளுமன்றத் தெரிவுக்குழு பரிந்துரைத்த போதிலும் அரசியலமைப்பு பேரவையால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
தம்மை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க சில அரசியல் கட்சிகளை ஜனக ரத்நாயக்க அணுகியுள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
சட்டத்தின் பல ஷரத்துகளை மீறி தன்னிச்சையாகச் செயற்பட்டு இலங்கை மின்சார சபையின் வலுச்சக்தித் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதை ஜனக ரத்நாயக்க தடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தை ஆணைக்குழுவின் தலைவர் நிராகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.