கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன்தினம் கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற 24 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்த யுவதியின் காதலன் என அடையாளம் காணப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் வெல்லம்பிட்டியவில் வசிக்கும் பசிந்து சதுரங்க என்ற மாணவன் குறித்த யுவதியை கத்தியால் குத்தி கொலை செய்திருந்தமை விசாரணையில் தெரியவந்திருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் சடலத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள், உறவினர்கள் தோள்களில் சுமந்தவாறு ஊர்வலமாக கிரிவத்துடுவ கல்கந்த பொது மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து கல்கந்த பொது மயானத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவத்தில் உயிரிழந்த மாணவியின் தாயார் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
எனது மகள் பல்கலைக்கழகத்திற்கு நேரமாகியதால் நேற்றுமுன் தினம் சாப்பிடாமல் கூட சென்றுவிட்டாள். மிகவும் புத்திசாலித்தனமான பெண். நன்றாக படிப்பாள்.
என் கண்களை போன்று அவளை நான் பத்திரமாக வளர்த்து வந்தேன். படித்து முடித்தவுடன் மணப்பெண்ணாக அவளை பார்க்க ஆசைப்பட்டேன்.
ஆனால் இன்று மணப்பெண்ணாக பெட்டியில் வந்துள்ளார். இவ்வளவு நல்ல பிள்ளையை எவ்வாறு கத்தியினால் குத்த மனம் வந்தது.எனது நிலைமை எந்த தாய்க்கும் வரக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.