சேவை செய்யக் கூடிய அமைச்சரொருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியினம் கோரிக்கை .

 

 


மின்சாரச் சட்டத்தை மீறி அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின் கட்டண அதிகரிப்பு யோசனையை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, அனைவருக்காகவும் சேவை செய்யக் கூடிய அமைச்சரொருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியினம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்தது.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

சுயாதீன ஆணைக்குழு மற்றும் சட்டத்தை மீறி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு யோசனை, மின்சாரசபை தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

யோசனை ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தினால் தாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதனை மீண்டும் அமுல்படுத்த முயன்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

சட்டங்களை மீறி மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத கட்டண அதிகரிப்பு முறைமையை முன்வைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செலவுகளை மீட்டெடுக்க வேண்டி ஏற்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு அமைய கட்டண  திருத்தத்துக்கான முன்மொழிவை மின்சார சபையின் முகாமையாளர் மூலம் பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.