இலங்கையில் இருந்து பிரான்ஸ் ரீயூனியனிற்கு சென்ற இலங்கையை சேர்ந்த பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உடனடியாக தலையிட்டு தங்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் என பிரான்ஸ் ரீயூனியனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தங்களை விடுதலை செய்ய கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
”நாங்கள் கடந்த டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து புறப்பட்டு டிசெம்பர் 24ஆம் திகதி 2022 நாங்கள் பிரான்ஸ் ரீயூனியனில் வந்து சேர்ந்தோம். வந்து சேர்ந்தவுடன் எமது கடற்படை எம்மை கைப்பற்றி அவர்களின் காவலில் கொண்டுப்போய் எங்களின் சுய விபரம் எடுத்தார்கள்.
எங்களின் சுய விபரங்களை எடுத்தபின்னர் செனக் ஹோட்டலில் 33பேரும், விமான நிலையத்தின் திறந்த அறையில் 20பேரையும் தடுத்து வைத்தார்கள். நாங்கள் இலங்கையில் இருந்து உயிர் பயத்தினால் தான் புறப்பட்டோம்.
நாங்கள் பல முன்னாள் போராளிகள் இருக்கின்றோம். நாங்கள் எப்போதும் நாடு கடத்தப்படலாம் என்ற நிலையில் இருக்கின்றோம். உடனடியாக இதில் ஐக்கிய நாடுகள் சபை தலையீட்டு மனித உரிமைகளை பாதுகாக்கக்கூடிய நாட்டிற்கு அனுப்ப எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
எங்களில் மூவர் தற்கொலைக்கு கூட முயற்சி செய்து இருக்கின்றார்கள். இலங்கை இராணுவம் எங்களுக்கு என்ன செய்ததோ அதனை தான் பிரான்ஸ் ரீயூனியன் எங்களுக்கு செய்கிறது.
இவ்விடயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு , மனித உரிமைகள் அமைப்புக்கள், உலக நாடுகளின் தமிழர் அமைப்புக்கள் இதில் உடனடியாக தலையிட்டு எங்களை விடுதலை செய்ய உதவ வேண்டும்” என்கிறார்கள்.