வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பட்டப்பகலில் மற்றொரு கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி, ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் பொரளை காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
29 வயதான கைதி உடல் தேவைகளுக்காக கழிவறைக்குச் சென்றபோது, 52 வயதான கைதி பலவந்தமாக கழிவறைக்குள் நுழைந்து 29 வயது கைதியின் வாயை மூடியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொரளை காவல்துறையினர், துஷ்பிரயோக சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறிய 45 வயது கைதி ஒருவரின் வாக்குமூலங்களையும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கைதியின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொரளை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் ஜானக பியதர்ஷன விதானகேவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.