பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து முட்டைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், முட்டை ஏற்றுமதியில் ஈடுபடும் பிரதான நாடுகளிலும் பறவை காய்ச்சல் பரவிவருவதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும், இந்தியாவின் சில மாநிலங்களில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கிருந்து முட்டைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு கால்நடை சுகாதாரத் திணைக்களம் நேற்று அனுமதி வழங்க மறுத்திருந்தது.
அத்துடன் பறவைக்காய்ச்சல் இல்லாத நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறாயினும், முட்டை ஏற்றுமதியில் ஈடுபடும் பிரதான நாடுகளில் நெதர்லாந்து, துருக்கி, போலந்து, அமெரிக்கா, மலேசியா, ஜேர்மனி, சீனா,ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதன்மை வகிக்கின்றன.
இந்த பட்டியலில், இந்தியா 22 ஆவது இடத்தில் உள்ளது.