இதன்போது, இயற்கை விவசாயச் செய்கைக்கான விடயங்களை உள்ளடக்கிய நூல்களை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், ஆணையாளர் நா.மதிவண்ணன், நூலகர் த.சிவராணி, நூலகக் குழுத் தலைவர் எஸ்.கமலரூபன் ஆகியோருக்கு இந்தியாவிலிருந்து வருகை தந்த இயற்கை விவசாய விஞ்ஞானி எஸ்.ஆர்.சுந்தரராமன் வழங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணத்தின் நல்லூர் புதிய வெளிச்சம் அமைப்பின் ஸ்தாபகர் அனந்தராஜ் நவஜீவன், "பாரம்பரிய உணவுப் பழக்கத்தை நாம் தவிர்த்ததினாலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளோம். அந்நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்கை விவசாயச் செய்கை மூலம் எதிர்காலச் சந்ததியை வலுவூட்டும் நடவடிக்கையை நாம் முன்னெடுத்துள்ளோம்.
முன்னைய காலத்தில் பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயச் செய்கை காணப்பட்டதாகவும் அம்முறை தற்போது இல்லாமல் போய் அதன் தாக்கம் தற்போது உணரப்பட்டுள்ளது. இந்நிலையில், நஞ்சற்ற மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இயற்கை விவசாயச் செய்கைக்கான அறிவை வளர்க்க இத்தகைய நூலகங்களை தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைத்து வருகின்றோம்.
இயற்கை வழி விவசாய இயக்கத்தை தோற்றம் பெற வைக்கும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பின் மூலம் விவசாயப் பயிற்சிப்பட்டறைகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி நடத்துகின்றோம்.
இப்பயிற்சிப்பட்டறைகளானவை இந்தியா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்த அனுபவம் வாய்ந்த இயற்கை விவசாயிகள் மற்றும் புலமையாளர்களைக் கொண்டு கடந்த இரண்டு வாரகாலமாக நடத்தப்படுகின்றன.
பாரம்பரிய விவசாயச் செய்கை தொடர்பான நூலகங்களுக்கு நகரத்தை விட கிராமப்புறங்களில் அதிகளவில் கிராக்கி உள்ளது. நகரங்களில் வாசிப்புப் பழக்கம் குறைந்து காணப்படும் நிலையில், இத்தகைய நூலகங்களை கிராமப்புறங்களில் நிறுவுமாறும் கேட்கப்படுகின்றது" என்றார்.