மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முதலிடம்!!











ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமை வலுப்படுத்தல்   நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்  மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில்,  கிழக்கு மாகாணமும் மாவட்டத்திற்காக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் முதலாமிடத்தை தம்வசப்படுத்தியுள்ளனர்.  

உலகவங்கி மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில்  அண்மையில் (12) கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற "மாகாண நடவடிக்கை மற்றும் சிறந்த செயல்திறனுக்கான மதிப்பாய்வு" கூட்டத்தில் நான்கு பதக்கங்களையும்,  பல சான்றிதழ்களையும்  பெற்று, மாவட்ட அடிப்படையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முதலாவது இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது.

ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமை வலுப்படுத்தல்  (Primary healthcare System Strengthening Project (PSSP)) நிகழ்ச்சித் திட்டம் உலகவங்கியின் நிதி அனுசரணையில்  2018 ஆம் ஆண்டிலிருந்து  2023 வரையான 5 ஆண்டு காலப்பகுதிக்கு நடாத்தப்பட்டு வருகின்றது.

நாட்டின்  அனைத்து மாகாணங்களின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 26 பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளிலும் உள்ள 350 வைத்தியசாலைகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டமானது கடந்த நான்கு ஆண்டுகளில் 35 வயதிற்கு மேற்பட்டவர்களில், தொற்றா நோய்களுக்கான அபாய  மூலங்களை அடையாளப்படுத்தல், சுகாதார ஊக்குவிப்பு, சிகிச்சை, மறுசீரமைப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பரிசோதனை கூட முன்னேற்றம் மற்றும்  மருந்து முகாமைத்துவம் போன்ற விடயங்களில் கணிப்பிடப்படுகிறது.  

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தலைமையிலானவர்களின்  வெற்றிக்காக வைத்தியர்களான மயூரன் நாகலிங்கம், சசிகுமார், கஸ்தூரி குகன், பிராந்திய சுகாதார பணிமனைகளின் தலைவர்களும் பணியாளர்களும் மற்றும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள், மாகாண மற்றும்  மாவட்ட மருத்துவ அதிகாரிகள் என சுகாதார மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பலரும் இத்திட்டத்தில் பங்குபற்றியிருந்தமையும் தொடர்ந்தும்  பங்களிப்புக்களை வழங்கி வருகின்றமையும்   குறிப்பிடத்தக்கது.