சேது சமுத்திரத் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் நேற்று விசேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.
சேதுசமுத்திரத் திட்டம் 1860 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு கப்பல் கால்வாயை உருவாக்குவதற்காக முதன் முதலில் வரையப்பட்டது.
இந்த திட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்குநீரிணையை இணைக்கும் கால்வாயை தோண்டுவதுடன் தொடர்புடையது.
சேது சமுத்திரத் திட்டம் செயற்படுத்தப்பட்டால், தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படும் என இந்த தீர்மானத்தை வாசிக்கும் போது தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தென்மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டமானது 150 வருட கால கனவாகும்.
1860 ஆம் ஆண்டு கொமாண்டர் டெய்லரால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
1955 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள ஏ.ராமசாமி இந்த திட்டத்தை அமுல்படுத்தவதற்கான பிரயத்தனங்களை முன்னெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 1963 ஆம் மற்றும் 1964 ஆம் ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் அதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனை செயல்படுத்த தமது அரசாங்கம் அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.