ஸ்ரீ சித்திவிநாயகர் ,அன்னை பேச்சி தாயாரின் அருட்கடாட்சத்துடன் கதிர்காமத்தம்பி உடையார், சபாபதிபிள்ளை உடையார் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டு, பாடசாலை முகாமையாளர் K.O.வேலுப்பிள்ளை அவர்களால் சுவாமி விபுலாந்தர் மூலம் இராமகிருஸ்ண மிஷனுக்கு கையளிக்கப்பட்டு, பரமஹம்சரினதும் ஆசி பெற்று 114 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் விவேகானந்தா மகளிர் கல்லூரி

 


 


 









பிரபா பாரதி 


1909 காலப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்  நகர்புறங்களில் பாடசாலைகள் நிறுவப்பட்டு  குறிப்பிட்ட வசதி படைத்த சில பிரமுகர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி தேவையானது   என்று கருதப்பட்ட காலம். 

கல்லடி பிரதேச மக்கள் கல்வியில் நிமிர வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீ சித்திவிநாயகர்  ஸ்ரீ  பேச்சியம்மன் அருட்கடாட்சத்துடன் கதிர்காமத்தம்பி உடையார்  சபாபதி பிள்ளை உடையார்   ஆகியோர் 1909 ஆம் ஆண்டு தை மாதம் 19ம் திகதி விவேகானந்தா சுதேச வித்தியாசாலை  என்ற  பெயரில் பாடசாலை ஒன்றை ஸ்தாபித்தனர்.

இதற்கு கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை, கதிர்காமத்தம்பி உடையார் கனகரெட்ணம்   ஆகியோர் தங்களுக்கு சொந்தமான (48 பேர்ச்) காணியையும், சபாபதி பிள்ளை உடையார் தனக்குச்    சொந்தமான (48 பேர்ச்) காணியையும் வழங்கினர்.   96 பேர்ச் விஸ்தீரணத்தில்  இப்பாடசாலை   ஸ்தாபிக்கப்பட்டு (ஆதாரம் சாசனம் 2809)   கல்விப்பணியை ஆரம்பித்தது.

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் பிற்பாடு அவர்பால் ஈர்க்கப்பட்டு உடையார்கள்  கல்லடி பிரதேசத்தில் விவேகானந்தர் சபையை ஸ்தாபித்து நடாத்தி வந்த நிலையில்  1912ஆம்   ஆண்டு சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுத்துச் சென்ற   சகோதரி அவபாமியா அவர்களை அழைத்து வந்து பாடசாலையின் நிரந்தர கட்டிடத்திற்கு  அடிக்கல் நட வைத்தனர்.

4.07.1912 அன்று திருவாளர்களான தோ.குமாரவேலு சின்னத்தம்பி, சபாபதி பிள்ளை உடையார் குமரையா,  கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை, கந்தப்பெருமாள் அம்பிகைபாகப்பிள்ளை  ஆகிய நால்வரை தத்துவக்காரர்களாக நியமித்து 5000.00 ரூபாய்களை உடையார்கள்  பாடசாலையின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு K.C.V.K கம்பனியில் வைப்பிலிட்டனர். (ஆதாரம்  பதிவு இல.102- திகதி.1912.07.24 V0LUME, B-113/176,177 - சாசனம் இலக்கம் 2809)

உடையார்களின் மறைவுக்குப்பின் 1917ஆம் ஆண்டு கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை  முகாமையாளராக பாடசாலையை பொறுப்பேற்றார். திருவாளர்களான தோ. சி. செல்லத்துரை  சீ. குமரையா,  தோ.கு.சின்னத்தம்பி  நொ.க. நல்லதம்பி,  க. அம்பிகைபாகப்பிள்ளை ஆகியோரடங்கிய   நிர்வாகக்குழு பாடசாலையை நிர்வகிப்பதற்கு முகாமையாளரால் நியமிக்கப்பட்டது.  பாடசாலை மிக சிறப்பாக நடாத்தப்பட்டு வந்த நிலையில் மாணவர் அதிகரிப்பு காரணமாக 1924ஆம்   ஆண்டு K.O.வேலுப்பிள்ளை அவர்கள் கட்டட வசதி ஒன்றை ஏற்படுத்தி கொடுத்தார்.
 

1925 பங்குனி மாதம் எமது பாடசாலை முகாமையாளர் தலைமையில் சுவாமி விபுலானந்தரை   சந்தித்து கல்லடி பிரதேசத்திற்கு ஆங்கில பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான கூட்டத்திற்கு  வருகை தருமாறு அழைப்பு விடுக்கச்சென்ற குழுவினருடன் எமது பாடசாலை நிர்வாக குழுவும்   இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 1925 சித்திரை 10ஆம் திகதி சுவாமி விபுலானந்தர் கல்லடி பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டு  பாடசாலை முகாமையாளர் தலைமையில் நமது ஆரம்ப கட்டிட முன்பாக பேச்சியம்மன்   மைதானத்தில் ஆங்கிலப்பாடசாலை ஸ்தாபிப்பது பற்றிய கூட்டம் நடைபெற்றது.

இதில் சுவாமி விபுலானந்தர் தனக்கு சகல வளங்களையும் இப்பிரதேசம் ஒழுங்கு செய்து ஸ்தாபித்து வழங்கும் பட்சத்தில் ஆங்கிலப்பாடசாலையை தன்னால் நிர்வகித்து தர முடியும் என்று சுவாமி   தனது கருத்தை வெளிப்படுத்தினார். அச்சந்தர்ப்பத்தில் நிதி  நில கட்டட வசதிகளை ஏற்படுத்தி   கொடுக்க நமது பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வைப்பிலிட்டிருந்த 5000   ரூபாய்களை வழங்குவதாகவும் தெரிவித்தார். எமது சகோதர பாடசாலையான சிவானந்தா தேசிய   பாடசாலை ஸ்தாபிப்பதற்கு நமது ஆதரவும் ஒன்றிணைந்தது குறிப்பிடத்தக்கது.

24.04.1928 அன்று சுவாமி விபுலானந்தரிடம் 2809 இலக்க சாசனம் மூலம் அந்நிதியை   முகாமையாளர் K.O  வேலுப்பிள்ளை அவர்கள் (உயிருடன் இருந்த ஒரே ஒரு நம்பிக்கை   தத்துவக்காரர்) நமது சகோதர பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்காக   வழங்கியதுடன் எமது பாடசாலை ஆரம்ப கட்டடம் அதனை சார்ந்த நிலம் என்பவற்றையும்  உத்தியோகபூர்வமாக சுவாமியிடம் கையளித்தார்.

1928ம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் மூலம் பாடசாலை இராமகிருஸ்ண மிஷனுக்கு  கையளிக்கப்பட்டாலும் 1917 முதல் பாடசாலையை நிர்வகித்து வந்த நிர்வாக குழுவே பிரதேச  மக்களின் ஆதரவுடன் பாடசாலையை நடாத்தி வந்தது. 1932 இராமகிருஸ்ண மிஷனிடம்   முழுமையாக ஒப்படைத்தனர். 1932 முதல் ஸ்ரீ இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையை முழுமையாக   பொறுப்பேற்று இ.கி.மி விவேகானந்தா பெண்கள் பாடசாலை என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது.
மாணவர்களின் அதிகரிப்பு காரணமாக கட்டிட வசதிகளை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை மீளவும்   உருவானது. இந்நிலையில் 1940ல் திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்களும் 1949ல் டாக்டர் எஸ்.  தம்பிப்பிள்ளை அவர்களும் கட்டிட வசதிகளை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு   ஆதரவளித்தனர்.

1960ஆம் ஆண்டு வரை இராமகிருஸ்ண மிஷனின் நிர்வாகத்தில் பாடசாலை இயங்கியது. இக்கால   கட்டத்தில் சுவாமி விபுலானந்தர் சுவாமி நடராஜானந்தர் மற்றும் பல மிஷன் துறவிகளின் ஆசியும்   அர்ப்பணிப்பும் நிறைந்த சேவையும் பாடசாலையை வளர்ச்சி பாதைக்கு இட்டுச்சென்றது   குறிப்பிடத்தக்கது. இக்கால கட்டங்களில் அதிபர்களாக கடமை புரிந்த திரு.க. வேலுப்பிள்ளை

திரு.ச. சந்திரசேகரம் வேலுப்பிள்ளை  திருமதி.வ. சாராதா தேவி,    செல்வி. கண்மணி அருணாசலம்   ஆகியோர் என்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள்.

1960ம் ஆண்டு தை மாதம் 1ம் திகதி பாடசாலை அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. அரசு  பொறுப்பேற்ற பின் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.  1960ஆம் ஆண்டு திருமதி. பூபதி வேலுப்பிள்ளை அவர்களும், 1963ஆம் ஆண்டு செல்வி கண்மணி  அருணாசலம் அவர்களும், 1970ஆம் ஆண்டு திருமதி. பி.சிவானந்தராஜன் அவர்களும் அதிபர்களாக  நியமிக்கப்பட்டு சிறப்பாக கடமை புரிந்தனர்.

1971ம் ஆண்டில் திருமதி. இ. சிவபாதசுந்தரம் அதிபரானார். 1975 காலப்பகுதியில் மாணவர் தொகை   பெருகத்தொடங்கியது. இடப்பற்றாக்குறையும் ஏற்படத்தொடங்கியது. இதனை போக்க இக்கால  கட்டத்தில் அதிபராக இருந்த திருமதி. இ. சிவபாதசுந்தரம் 2 ஏக்கர் காணியை அமரர். இராஜன்  செல்வநாயகம் (முன்னாள் மட்/ மாவட்ட தேசிய அரசுப்பேரவை உறுப்பினர்) அவர்களின் 
ஒத்துழைப்படன் சுவிகரித்து பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து அவரது ஆதரவுடன் முதலாவது  மாடிக்கட்டிடத்தை இவ் வித்தியாலயத்திற்கு அமைத்துக்கொடுத்தார்.  சுவாமி விபுலானந்தர்  மண்டபம், அவபாமியா மண்டபம், விஞ்ஞான மனையியல் கூடங்களுடன் மின்சார வசதியும்  
ஏற்படுத்தப்பட்டதுடன், க.பொ.த (உயர்தர) கலைத்துறை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது. கல்வி    கலாசார விளையாட்டு துறைகளில் பாடசாலை முன்னேற்றமடைந்து வந்ததும் சாதனை புரிந்ததும்  குறிப்பிடத்தக்கது .

 1987ம் ஆண்டு திருமதி . கு. வேலுப்பிள்ளை அவர்கள் அதிபரானார். இவரது காலத்தில் பாண்டு  வாதிதியக்குழு  றோட்டறிக் கழகம்  இன்றாட் கழகம் சுவாப் கழகம் சாரணிய இயக்கம் என்பன   ஆரம்பிக்கப்பட்டது.

1990 காலப்பகுதியில் திருமதி. கு. சோமசுந்தரம் அதிபரானார். இவரது காலப்பகுதியில்   அப்போதைய மாகாண அமைச்சில் திட்டமிடல் அதிகாரியாக கடமையாற்றிய திரு. S.S. மனோகரன்  அவர்களின் ஆதரவுடன் நிவேதிதா மண்டபம் அமைக்கப்பட்டது. பாடசாலையில் கல்வித்தரம் O/L   மாணவர்களின் சித்தி வீதம் 15-20 வீதமாகவும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் தொகை 06
எண்ணிக்கைக்குள் இருந்தது.

1995ம் ஆண்டு திருமதி. உ. நடராசா அதிபரானார். பழைய கல்முனை வீதியில் அதிபர் காரியாலய  கட்டிடம் நோராட் உதவியுடன் அமைக்கப்பட்டதுடன் இவர் எடுத்த முன் நகர்வுகளும் சமூகத்திற்கு  வழங்கிய ஒத்துழைப்பும் பாடசாலையின் மறுமலர்ச்சிக்கு ஆரம்ப வித்திட்டது..

1996ம் ஆண்டு திரு. ச. தர்மராஜன் அதிபரானார். இவரது காலப்பகுதியில் ஒன்று கூடல் மண்டபம் மூன்று மாடிக்கட்டிடம், விஞ்ஞான ஆய்வு கூடம் செயற்பாட்டு அறை, விவசாய அலகு, விடுதி  அமைந்துள்ள இரு மாடி கட்டிடம் புதிய கல்முனை வீதி அருகில் இரண்டு மாடிக்கட்டிடம் என்பன  அமைக்கப்பட்டதுடன்  திணைக்கள பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த இரண்டு மாடிக்  கட்டிடம்   பாடசாலைக்கு உத்தியோக பற்றற்ற முறையில் பெறப்பட்டது. இதன் மூலம் எமது   மாணவச்செல்வங்கள் மர நிழல்களின் கீழிருந்து கல்வி கற்கும் சூழ்நிலை தவிர்க்கப்பட்டு வசதி  வாய்ப்புக்களுடன் கூடிய கல்வியை கற்க கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அமரர் யோசப்   பரராஜசிங்கம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), திரு.S.S. மனோகரன் (முன்னாள் மாவட்ட   கல்வி பணிப்பாளர்) ஆகியோரின் ஒத்துழைப்பு ஆதரவு என்றும் மறக்கமுடியாதது. பாடசாலையின் 
அமைப்பு உயர்பார்வைக்கு மாற்றம் பெற்று நகர்ப்புற பாடசாலைகளின் தோற்ற நிலைக்கு மாற்றம்  பெற்று பெரு மறுமலர்ச்சி கண்டது. சகல துறைகளிலும் படிப்படியான வளர்ச்சியை   எட்டத்தொடங்கியது. O/L  மாணவர்களின் சித்தி வீதம் 20-30 வீதமான மாற்றத்தையும்    பல்கலைக்கழக அனுமதி 12 ஆகவும் அதிகரித்தது  

2002ம் ஆண்டு தை மாதம் முதல் சித்திரை மாதம் வரையான காலப்பகுதியில் அமரர். ம. பிரசாத்  அவர்கள் அதிபராக கடமையாற்றினார்.
2002ம் ஆண்டு திருமதி. இ. புஸ்பராஜா அதிபரானார். இவரது காலத்தில் புதிய நிர்வாக கட்டிடம்   (ஜனாதிபதி நிதி), ஒன்று கூடல் மண்டப முகப்பு வாயில் (உதவி திருமதி.சங்காரவேல்) பிரதான   முகப்பு வாயில் (உதவி திரு. திருமதி. பாலசுப்பிரமணியம்)  ஆரம்ப பிரிவு மாணவர் பாண்டு வாதியக்கழு என்பன அமைக்கப்பட்டதுடன் O/L மாணவர் சித்தி வீதம் 40-45 வீதமாகவும்   பல்கலைக்கழக அனுமதி 19 ஆகவும் அதிகரித்தது. சிறப்புடன் இவரது சேவை அமைந்தது.

2011ம் ஆண்டு திருமதி. தி. ஹரிதாஸ் பிரதேச சமூக அமைப்புக்களின் ஏகமனதான கோரிக்கையின்பால் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் திணைக்கள தேவைக்காக பயன்படுத்தப்பட்ட  முறைசாரா கற்கை நெறிக்குரிய கட்டிடம் உத்தியோகபூர்வமாக பெறப்பட்டது. 13 வருடகாலமாக
பூர்த்தி செய்யப்படாமலிருந்த விஞ்ஞான ஆய்வு கூட கட்டிடத்தொகுதியின் மூன்றாம் மாடி  கட்டப்பட்டு பூரணப்படுத்தப்பட்டது. (உதவி திரு. K.O.V.K விமலநாதன் திரு. இ. நெடுஞ்செழியன்  அவர்கள்) புதிய நிர்வாக கட்டடத்தொகுதி 10 வருடங்களாக பூர்த்தி செய்யப்படாத நிலையில்
காணப்பட்டது. இதன் இரண்டாம் மாடி அமைக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்டது. (உதவி திரு.  K.O.V.K விமலநாதன் திரு.இ. நெடுஞ்செழியன் அவர்கள்) மூன்று கோடி செலவில் அமெரிக்க ராணுவ  நிதிய உதவியுடன் வகுப்பறைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு   மாணவர்கள் வசதியுடன் கற்க வழி செய்யப்பட்டது.

 கல்வி கலாசார விளையாட்டு துறைகளிலும்   வரலாற்று சாதனை பதியப்பட்டது. O/L சித்தி வீதம் வரலாற்றில் 50 வீதத்தை கடந்து 65   வீதத்தை எட்டியது. பல்கலைக்கழக மாணவர் அனுமதி 44 ஆக உயர்ந்து பாடசாலையை நிமிர   வைத்தது. விளையாட்டு துறையில் தொடர்ச்சியாக 8 வருடங்களாக தர வரிசையில் முதல் இடத்தை   பிடித்து வந்ததும்,கலாசார நிகழ்வுகளில் மாணவர்களின் பங்களிப்பு பாராட்டப்பட்டு ஏனைய   பாடசாலைகளுக்கு  சவால் நிலையை ஏற்படுத்தியதும் வரலாற்று பதிவுகளே.  இப்பாடசாலை  இவரது காலத்தில்  விவேகானந்தா மகளிர் கல்லூரி என்ற பெயர் மாற்றம் பெற்று தலை நிமிர்ந்தது.

 

2018 நடுப்பகுதியில் திருமதி. பி. ராஜகோபாலசிங்கம் அதிபரானார். இவர் மாணவர்களின் கல்வி   மேம்பாட்டிற்காக பல திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தினார். குறிபாக  O/L, A/L   மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பெரும் அக்கறை கொண்டு செயல்பட்டார்.

2020ம்ஆண்டு திருமதி. ந. தர்மசீலன் அதிபராக பொறுப்பேற்று  இன்றுவரை பாடசாலையை சிறப்புடன்   வழிநடத்தி சென்று கொண்டிருக்கின்றார்.  ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ சித்தி விநாயகரின்  அருட்கடாட்சத்துடன் ஆரம்பிக்கப்பட்டு ஸ்ரீ இராமகிருஸ்ண பரமஹம்சரின் ஆசி பெற்ற நமது  பாடசாலை ஆசிரியப் பெருந்தகைகள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க  
உறுப்பினர்கள்,  நலன் விரும்பிகள் ஆகியோரின் ஆதரவுடனும், பங்களிப்புடனும் இப்பாடசாலை   வளர்ந்து  செல்கின்றது.