11 வயதான சிறுமியொருவர், சுமார் 5 கிலோமீற்றர் தூரம் தனியே நடந்து சென்று, பொலிஸில் முறைப்பாடு .

 


தன்னுடைய சித்தியின் சித்திரவதையை தாங்கிக்கொள்ள முடியாத 11 வயதான சிறுமியொருவர், சுமார் 5 கிலோமீற்றர் தூரம் தனியே நடந்து சென்று, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று ஹொரவப்பொத்தானையில் இடம்பெற்றுள்ளது. 

சிறுமியின் தாய், இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டார். அதன்பின்னர், அச்சிறுமியின் தந்தை, பிள்ளையொன்று இருக்கும் விதவை மறுமணம் செய்துகொண்டுள்ளார். 

தன்னுடைய சித்தி, அவளுடைய பிள்ளையை அன்பாக கவனிப்பதாகவும், தன்னை ஏசி, அடித்து துன்புறுத்துவதாகவும் சிறுமி செய்துள்ள முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துன்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமலேயே ஐந்து கிலோமீற்றர் தூரத்தை நடந்தே வந்து முறைப்பாடு செய்துள்ளதாகவும் அச்சிறுமி, தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

41 வயதான சித்தியை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.