நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 


 

 


துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கியில் 912 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5300 பேர் காயமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.

அத்துடன், சிரியாவின் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 467 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

 1939 ஆம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவு இது என்று கூறிய ஜனாதிபதி ஏர்டோகன், இதன் விளைவாக 2,818 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறினார்.

தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

தற்போது, கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களைத் தேடி தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது எகிப்தின் கெய்ரோ, சைப்ரஸ் மற்றும் லெபனான் போன்ற தொலை தூர பகுதிகளில் உணரப்பட்டது.

6.6 மெக்னிடியூட் அளவில் குறைந்தது 20 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கிரீஸ் மற்றும் யுக்ரைன் உட்பட பல நாடுகள் உடனடியாக உதவிகளை வழங்கிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.