நமது நாட்டில் உள்ள இந்திய தமிழ் முகவர்கள் 13ஆவது திருத்தத்துக்கு அழைப்பு விடுக்கின்றனர் என்றும் அது ஓர் எலும்புக்கூடு எனவும் அதில் எதுவும் இல்லை என்றும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்தது.
“13ஆவது திருத்தத்தை நீக்குமாறு பிக்குகளும் பல சிங்கள அரசியல்வாதிகளும் குரல் கொடுப்பதையும் இது காட்டுகிறது. 13ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி கோரி நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இவை இரண்டும் ஒற்றையாட்சியின் ஒரு பகுதியும் மற்றும் 2/3 பெரும்பான்மை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஈகைப்பேரொளி முருகதாஸுக்கான அஞ்சலி நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்களாகிய நாம் தமிழர் மண்ணில் வாழும் ஒவ்வொரு தமிழர்களையும் தமிழர் இறையாண்மைக்காக வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விட வேண்டும். இந்த வாக்கெடுப்பை அமெரிக்காவோ அல்லது ஐ.நாவோ கண்காணிக்க வேண்டும்.
உலகில் பெரும்பாலான வாக்கெடுப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டாயப்படுத்தப்பட்டவை.
இறுதி வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுங்கள். தமிழ் இறையாண்மை கிடைத்தால் நமக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும். நம் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் வரும்.