யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
75ஆவது சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவை மீறியமை மற்றும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் செல்ராசா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
யாழ்ப்பாண தலைமையக காவல்துறை நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, 75ஆவது சுதத்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.