துருக்கி - சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 640-ஐ கடந்துள்ளது. பலரும் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
துருக்கியின் தொழில் நகரான காசியான்டேப் சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியது. பூகம்பத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.
பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நில அதிர்வும் ஏற்பட்டது. அதன் தாக்கம் அளவுகோலில் 6.7 ரிக்டராக பதிவாகியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தின் அதிர்வலைகள் லெபனான், சிரியா, ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.
பூகம்பத்தால் இதுவரை 640-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இடிபாடுகளில் பலரும் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் உயிரிழப்புகள் ஏற்பட்ட போதிலும் , துருக்கியில்தான் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.