9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14- வயது மாணவன் சகோதரனை கொலை செய்தது ஏன் ?

 

 


 கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது மூத்த சகோதரனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 வயதுடைய சிறுவனை இன்று (08) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேக்கவத்தை - பலாதொட்ட பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தந்தையை பார்ப்பதற்காக தாய் சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞரொருவரே கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று காலை குறித்த சிறுவனின் காதல் விவகாரம் தொடர்பில் இவர்களுக்கிடையில் வாக்குவாதமொன்று இடம்பெற்றுள்ளதுடன், காதல் தொடர்பை துண்டிக்குமாறு மூத்த சகோதரன், சந்தேகநபரான இளைய சகோதரனை வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது வாக்குவாதம் முற்றியதையடுத்து 26 வயதான சகோதரன், பாடசாலை மாணவனான தமது சகோதரனை தாக்கிவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.

அதன்போது, சந்தேகநபரான சிறுவன், உறக்கத்தில் இருந்த தமது மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தினால் கழுத்து பகுதியில் வெட்டிக் கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

9ஆம் தரத்தில் கல்வி கற்கும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் நேற்று சட்ட வைத்திய பரிசோதனைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார்.