சமஷ்டி முறைமையிலான அதிகார பகிர்வு தொடர்பில் பிரசாரங்களை முன்னெடுத்த ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனதிபதியானவுடன் குட்டிக்கரணம் அடித்து விட்டார் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.
ஜனாதிபதி தனது கொள்கை பிரகடன் உரையில் தேசியப் பிரச்சினை தொடர்பில் முக்கியமாக எதனையும் குறிப்பிடவில்லை ஒருசில விடயங்களை மாத்திரம் தொட்டுச் சென்றுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனும்,தானும் ஒன்றாக பாராளுமன்றத்திற்கு தெரிவானதாகவும்,பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஆனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முறைமையை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை என்றார்.
இராணுவத்துடன் இடம்பெறும் காணி விடுவிப்பு தொடர்பான விடயங்களை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.1985 ஆம் ஆண்டு வரைபடத்திற்கு அமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம்.தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.