வடக்கு- கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கையின் 75வது சுதந்திர
தினத்தை, கரிநாளாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு
நோக்கி நாளையதினம் ஆரம்பிக்கவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் அரசியல் தரப்புக்கள் கலந்துரையாடலொன்றை நடாத்தின.
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், விவசாய அமைப்புகள்
மற்றும் அரசியல் பிரதிநிதிகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிர்வரும்
7ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தை பேரணி வந்து சேரும் போது மட்டக்களப்பு
மாவட்டத்தில் இருக்கின்ற சிவில் சமூக அமைப்புகள், விவசாய அமைப்புகள், ஏனைய
அமைப்புகள் அத்தோடு அரசியல் கட்சிகள் தமிழ் மக்களுக்காக ஒன்றிணைய வேண்டும்
என்ற குறிக்கோளோடு கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் தமிழத்
தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரன்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைரெட்னம், சிவில் சமூக
அமைப்பின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், விவசாய சங்க அமைப்புக்களின்
உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள்,
மற்றும் ஊடகவியலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.