“கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்துக்கு கப்பலை ஒருவர் வாடகைக்கு எடுத்து வந்தார் .இம்முறை அதனை மட்டக்களப்பில் ஒருவர் வாடகைக்கு எடுத்திருக்கிறார். ஆனால் அம்பாறையில் இம் முறை கப்பலுக்கு பதிலாக படகு வந்திருக்கிறது” என்று தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் “கப்பலும் வேண்டாம்; படகும் வேண்டாம். வீடு ஒன்றே போதுமானது” என்று தெரிவித்தார்.
காரைதீவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய போது மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,
“தமிழரசுக் கட்சி ஒன்றுதான் தமிழருக்கான ஒரே கட்சி. தமிழருக்கான அரசு.
கடந்த 75 வருட காலமாக வீட்டு சின்னத்தில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு
குரல் கொடுத்து அவர்களுக்கான தேசியத்துக்காக வாழ்ந்து வருகின்ற ஒரே ஒரு
கட்சி தமிழரசுக் கட்சி .
கட்சியின் வர்ணத்துடனான இந்த சால்வைத் துண்டை எமது கட்சி ஒன்று தான்
தொடர்ந்து அணிந்து வந்துள்ளது. ஏனைய பல கட்சிகளுக்கு அது தூக்குகயிறாக
மாறியிருக்கிறது.
கடந்த தேர்தலுக்கு கப்பலிலே வந்தவர்கள் அத் தேர்தல் முடிந்தவுடன் மாயமாகி மறைந்தார்கள். இன்று வரை காணவில்லை.
அதேபோல் இன்று மட்டக்களப்பில் பாரிய சூழ்ச்சி நடக்கின்றது. மண் மாபியாக்களுக்கும் அமைச்சருக்கும் இடையே இரவுசந்திப்புகள் நடக்கின்றன. பகலில் வேறு வேஷம். மக்களே ஏமாந்து விட வேண்டாம். அவர்களால் ஒரு சபையை கூட வெல்ல முடியாது. வடக்கு, கிழக்கில் தமிழரசு ஒன்றே அரசமைக்கும்” என்றார்.