நாட்டின் இன்றைய வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலின் படி, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் இருந்து காலி வரையான கரையோரப் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மன்னாரிலிருந்து புத்தளத்திலிருந்து கொழும்பு வரையும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும். கடல் அலைகளின் வேகம் அதிகரித்துள்ளதால், மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பிலிருந்து காலி வரையான கரையோர கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அதற்கமைய, கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும், கடல் அலைகள் வேகமாக கரையை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.