எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதியன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்திக் கூறுகள் காணப்படுவதாக அறியமுடிகிறது.
குறித்த தினத்தில் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அரசியல் கட்சிகளின் செயலாளார்கள் விடுத்துள்ள அறிவிப்புகள் மூலம் தெரியவருகிறது.
தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளை இன்று (15) விநியோகிக்க முடியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற சந்திப்பில் அறிவித்துள்ளார்.
உரிய பணம் செலுத்தப்படும் வரை வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படமாட்டாது என்று அரசாங்க அச்சக திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தபால் மூல வாக்களிப்புக்குத் தேவையான வாக்குச் சீட்டுகள் தொடர்பான பிரச்சினையை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்கொண்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுமாறும் பின்வாங்க வேண்டாம் என்று ஆணைக்குழுவின் தலைவரிடம் கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் இருந்து வெளியேறுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர், சட்டமா அதிபரிடம் இருந்து தனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததாக மத்தும பண்டார எம்.பி குறிப்பிட்டார்.
இதேவேளை, நிதி பிரச்சினைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்க்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று ஆணைக்குழுவின் சந்திப்பின் மூலம் தெரியவருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவும்தெரிவித்தார்.