முதியோர்களுக்கான நடமாடும் மருத்துவ, கண்சிகிச்சை மற்றும் நிவாரண உதவி வழங்கல்!!

 









மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முதியோர்களுக்கான கண் சிகிச்சை மற்றும் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை, மருத்துவ முகாம் மற்றும் நிவாரண உதவி வழங்கல் நிகழ்வு பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரமின் வழிகாட்டலில் கடந்த இரண்டு நாட்களாக (22,23 மற்றும் 24) மூன்று கட்டங்களில் இடம்பெற்றது.
இம்முகாம்கள் ஹெல்பேஜ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் முதற்கட்ட முகாம் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மத்திய நிலையத்திலும், இரண்டாம் கட்டம் பெரிய புல்லுமலை கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலும், மூன்றாம் கட்டம் மட்டக்களப்பு உறுகாமம் சரஸ்வதி வித்தியாலயத்திலும் நடைபெற்றது.
இதில் 55 வயதிற்கு மேற்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை கிழக்கு மற்றும் மேற்கு, பெரிய உறுகாமம், கோப்பாவெளி, உறுகாமம், கித்துள் போன்ற பிரதேச வயோதிபர்கள் இம்முகாம்களில் சிகிச்சை பெற்றார்கள். அவர்களுக்கு உடல்பருமன் சுட்டெண் கணிப்பிடப்பட்டதுடன், உணவுப் பழக்கவழங்களில் பின்பற்றுவதற்கான முறைகளும், ஆலோசனைகளும் தெளிவுபடுத்தப்பட்டன.
அத்துடன் இவர்களுக்கான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவசியமானவர்களுக்கு மூக்குக்கண்ணாடி பெறுவதற்கான சிபாரிசுகள் மற்றும் தொற்றா நோய்களுக்கான மருந்துகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் பி. டி. மலேஸ்வரன், கண் சிகிச்சை மற்றும் தொற்றா நோய் வைத்தியர்கள், ஹெல்பேஜ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.